வில்லினை யொத்த புருவம்

(காவடி சிந்து)

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை
வேலவா! வடிவேலவா!!
அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது
வேலவா! வடிவேலவா!!

சொல்லினைத் தேனில் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியை - சிறு வள்ளியைக்
கண்டு சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே

பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - குற வள்ளியை
ஒரு பார்ப்பனக் கோலந் தரித்துக்
கரந்தொட்ட வேலவா! வடிவேலவா!!

துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
மானைப்போல் - வன மானைப்போல்
தினைத் தோட்டத்திலேயொரு பெண்ணை
மணங்கொண்ட வேலவா! வடிவேலவா!!

Lists: 4-jan-2026